Wednesday, July 6, 2011

ஆட்டுக்காரன் பாட்டு

அஞ்சாறு மைலு போக வேணும்,
ஆத்தங் கரயும் தாண்ட வேணும்.
பச்சயத்தான் பாக்க வேணும்,
பகல் முழுக்க மேய்க்க வேணும்,
புழுக்க எல்லாம் அள்ள வேணும்,
வயக்காட்டுல தள்ள வேணும்!

முழுவாம இருக்குது மூணாடு
மொதக் குட்டி போடுது ரெண்டாடு
பெண்குட்டி அது போட்டாக்க
பட்டிக்கு வந்து சேந்துருமே
ஆண்குட்டியா போட்டுதுன்னா
பண்ணைக்குத்தான் போகிருமே!

ஆடு வவுறு நெறஞ்சாத்தான்
பாவி மனசு நெறயுமுன்னு
ஆட்டுக் காட்டுல அலஞ்சதால
அறிவத்துப் போயிருச்சு
ஆட்டுக் கார கருப்பன்னு
ஊருக்குள்ள பேராச்சு!

நான் பெத்த புள்ளயாச்சும்
நல்லாய் படிக்க ஆசப்பட்டா
ஆடு வித்தப் பணத்தால
பண்ண புள்ள படிச்சுருச்சு
ஆடு வளத்த அடயாளமா
ஆட்ட மேய்க்குது எம்புள்ள!

No comments:

Post a Comment