
மூணுகண்ணு நொங்கெடுத்து
நொச்சிக்குச்சி அச்சுபோட்டு
கருவேலங் கவகொடுத்து
தள்ள தள்ள போகும்பாரு,
எங்க ஊரு சீமையில
திருவாரு தேருபோல
பள்ளம் மேடு காடெல்லாம்
உருண்டு போகும் நுங்கு வண்டி!!
நடந்து பழகுன நாள்மொதலா
நா ஓட்டின மொதவண்டி
வண்டி ஓட்டி ஓட்டியே
நட பழகினது நாந்தானே;
வயக்காடு வரப்புவழி
வல்லம் பாற, வால் பாற
எல்லா ஊரும் சுத்திச்சுத்தி
வண்டியில போய் வருவன்!
வருசம் இருவது ஓடிருச்சு,
கட்டிடங்க பெருத்திருச்சு
வண்டி ஓட்டின தடத்துல
காரும் பஸ்சும் வந்தாச்சு
வயலு வரப்பு போயிருச்சு
வாழத்தோப்பு வயக்காடு
தென்னந்தோப்பு பனங்காடு
போனஎடமும் தெரியல
காருலவந்து எறங்கினாலும்
காரோட தார தெரியல
நொங்கு வண்டி போனதடம்
நென்சுக்குள்ள பதிசுருச்சு;
இனி யொரு தடவ அது போல
நொங்குவ்ண்டி தள்ளிக்கிட்டு
எங்கூரு வரப்பெல்லாம்
ஓட்டணும்னு ஏங்குது!
No comments:
Post a Comment